வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்? - மனம் திறந்தார் ராகுல் காந்தி


வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்? - மனம் திறந்தார் ராகுல் காந்தி
x

தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ராகுல் காந்தி மனம் திறந்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (வயது 52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், "என் வாழ்வின் அன்பு, எனது இரண்டாம் தாய்" என பாசத்துடன் உருகினார்.

அப்போது அவரிடம், "அப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழ்வில் சேர்வீர்களா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "இது ஒரு சுவாரசியமான கேள்வி. நான் ஒரு பெண்ணையே விரும்புவேன். அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்த பெண் என் அம்மா மற்றும் என் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது" என பதில் அளித்தார்.

பப்பு என அழைப்பது பற்றி....

அவரது எதிர்ப்பாளர்கள் பல்வேறு பெயர்களை வைத்து அவரை அழைப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராகுல் காந்தி, "நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன். நீங்கள் என்ன சொல்ல விரும்பினாலும், அதுபற்றி கவலை இல்லை. நான் யாரையும் வெறுக்க மாட்டேன். நீங்கள் என்னை தவறாக நடத்தலாம், ஏன் என்னை அடிக்கவும் செய்யலாம். நான் உங்களை வெறுக்க மாட்டேன். என்னை பப்பு என்று அழைக்கிறார்கள் என்றால் அது ஒரு பிரசாரம். அவர்கள் தங்களுக்குள் இருக்கிற பயத்தால் அப்படி சொல்கிறார்கள். நீங்கள் எனக்கு இன்னும் பல பெயர்களை வைக்கலாம். நான் கவலைப்படவில்லை. நான் நிம்மதியாகவே இருக்கிறேன்" என பதில் அளித்தார்.


Next Story