மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா? - காங்கிரசுக்கு நக்மா கேள்வி


தினத்தந்தி 30 May 2022 4:20 AM GMT (Updated: 30 May 2022 4:40 AM GMT)

மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா? என காங்கிரசுக்கு நக்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை,

மாநிலங்களவையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடிகிறது. இதனால் மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மாநிலங்களவையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் தேவையாகும்.

இதனிடையே, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப்கார்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மராட்டிய காங்கிரசால் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டியத்தில் இருந்து இம்ரான் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதற்க்கு காங்கிரஸ் கட்சியின் மகளிரணி பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நக்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2003-04 ஆண்டில் நான் காங்கிரசில் இணைந்தபோது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி எனக்கு உறுதியளித்தார். நாம் அப்போது ஆட்சியில் இல்லை. அப்போதில் இருந்து 18 ஆண்டுகள் ஆகியும் மாநிலங்களவையில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவதாக இம்ரானுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா?' என தெரிவித்துள்ளார்.


Next Story