எடியூரப்பா ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது குறுக்கிட்ட தெருநாய்கள்


எடியூரப்பா ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது குறுக்கிட்ட தெருநாய்கள்
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:45 PM GMT)

துமகூரு மாவட்டம் துருவகெரேயில் எடியூரப்பாவின் ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது தெருநாய்கள் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

துமகூரு மாவட்டம் துருவகெரேயில் எடியூரப்பாவின் ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது தெருநாய்கள் குறுக்கிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெருநாய்கள் குறுக்கிட்டன

துமகூரு மாவட்டம் துருவகெரேயில் நேற்று பா.ஜனதா கட்சியின் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் துருவகெரேவுக்கு சென்றார். அங்கு அவரது ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி தரை இறங்கியது. அந்த ஹெலிகாப்டர் தரையை தொடும் நேரத்தில் திடீரென 2 தெருநாய்கள் அதன் அருகில் வந்து, சத்தமாக குரைத்து குறுக்கிட்டன.

ஹெலிகாப்டரின் காதை பிளக்கும் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் நாய்கள் அங்கிருந்து நகராமல் குரைத்து கொண்டிருந்தன. ஹெலிகாப்டருக்கு மிக அருகில் நின்று கொண்டு நாய்கள் குரைத்ததால், அவைகள் எங்கு தரையிறங்கும்போது உள்ளே பாய்ந்துவிடுமோ என்று விமானி சற்று அதிர்ச்சி அடைந்தார். எடியூரப்பாவை வரவேற்க காத்திருந்த அதிகாரிகள் மற்றும் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த நாய்களை அவர்கள் விரட்டியடித்தனர். எடியூரப்பாவின் ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது, நாய்கள் குறுக்கிட்ட நிகழ்வு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

பிளாஸ்டிக் பைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, எடியூரப்பா ஹெலிகாப்டரில் கலபுரகி மாவட்டம் ஜேவர்கிக்கு பயணித்தார். அங்கு அந்த ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது, அருகில் இருந்த பிளாஸ்டிக் பைகள் காற்றில் பறந்து ஹெலிகாப்டரை சூழ்ந்து கொண்டன. இதை உணர்ந்த விமானி சாதுர்யமாக செயல்பட்டு உடனே ஹெலிகாப்டரை மேலே இயக்கி சென்று விபத்து ஏற்படாமல் தவிர்த்தார். தற்போது 2-வது சம்பவமாக நேற்று எடியூரப்பாவின் ஹெலிகாப்டர் தரை இறங்கியபோது சிக்கலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story