அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: பெங்களூருவுக்கு 'மஞ்சள் அலர்ட்'


அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: பெங்களூருவுக்கு மஞ்சள் அலர்ட்
x
தினத்தந்தி 18 Oct 2022 6:45 PM GMT (Updated: 18 Oct 2022 6:45 PM GMT)

அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதால் பெங்களூருவுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. பெங்களூருவில் தினமும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முழுவதும் பெங்களூருவில் மழை பெய்யவில்லை. நேற்று காலையிலும் வெயில் அடித்தது. இதனால் இனி மழை பெய்யாது என்று நினைத்து இருந்த பெங்களூரு மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் நேற்று மதியத்திற்கு மேல் திடீரென மழை பெய்தது. ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம் கே.ஆர்.மார்க்கெட், ஜே.பி.நகர், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, இந்திராநகர், காட்டன்பேட்டை, விஜயநகர், பசவேஸ்வரா நகர், மைசூரு ரோடு, அக்ரஹாரா தாசரஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இந்த நிலையில் அடுத்த 4 நாட்கள் பெங்களூருவுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 6 முதல் 12 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story