வாலிபர், அரிவாளால் வெட்டி படுகொலை; பழிக்கு பழியாக நடந்ததா? போலீஸ் விசாரணை


வாலிபர், அரிவாளால் வெட்டி படுகொலை; பழிக்கு பழியாக நடந்ததா? போலீஸ் விசாரணை
x

புத்தூரில் பட்டப்பகலில் வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா சம்பியா பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கார்த்திக் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் புத்தூர் தாலுகா ஆர்யாப்பு பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் சரண்ராஜ், பெர்லம்பாடி பகுதியில் மருந்து கடை வைக்க ஏற்பாடுகள் செய்து வந்தார். நேற்று மதியம் சரண்ராஜ், பெர்லம்பாடி பகுதியில் மருந்து கடை வைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சரண்ராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்லாரே போலீசார் சரண்ராஜின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்த்திக் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story