சுற்றுச்சூழலை காப்பாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்
கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட கவர்னர் சுற்றுச்சூழலை காப்பாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என கூறினார்.
மைசூரு:-
கவர்னர் பட்டம் வழங்கினார்
மைசூரு நகர் மானச கங்கோத்ரியில் கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 18-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இதில் மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்பட 3 பேருக்கு வழங்க இருந்தது.
ஆனால் ஜனாதிபதி திரவுபதி முர்மு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இன்று(திங்கட்கிழமை) பெங்களூரு வரும் ஜனாதிபதியிடம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் சரணப்பா தெரிவித்தார். மற்ற 2பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் பட்டமளிப்பு விழாவில் 44 பேர்களுக்கு தங்க பதக்கம் உள்பட 8,722 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் 5,241 பேர் மாணவிகளும், 3,481 ஆண்களும் ஆவர். விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:-
கர்நாடக திறந்்தநிலை பல்கலைக்கழகம் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பட்டம் பெற்று வருகிறார்கள்.
கலந்து கொண்டவர்கள்
திறந்தநிலை பல்கலைக்கழகம் நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கல்வியின் முன்னேற்றத்தை திறந்தநிலை பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. தரமான கல்வி, வழிகாட்டுதல், வேலை, நல்ல சிந்தனைகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக பொதுமக்கள் அனைவரும் நன்கொடை வழங்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடைமை ஆகும். அதனை காப்பாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டமளிப்பு விழாவில், உயர் கல்வி துறை மந்திரி எம்.சி.சுதாகர், கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி அசோக் எஸ்.கிணகி, பல்கலைக்கழக துணைவேந்தர் சரணப்பா, ரெஜிஸ்டர் கே.பீ. பிரவீன் மற்றும் கே.எல்.என். மூர்த்தி, பேராசிரியர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.