தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது


தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது
x

கலபுரகியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். செருப்பை துருப்புச்சீட்டாக கொண்டு 3 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர்.

கலபுரகி:

தொழிலாளி

கலபுரகி (மாவட்டம்) டவுன் குப்பி காலனி கோசகி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் முகமது கரீம். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 10-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மறுநாளான 11-ந் தேதி காலையில் எம்.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாலையில் முகமது கரீம் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரை யாரோ மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருந்தனர். இதுபற்றி எம்.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

செருப்பை துருப்புச்சீட்டாக...

கொலை நடந்து 2 வாரங்களாகியும் போலீசாருக்கு துப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கொலை நடந்த இடத்தில் இருந்து ஒரு ஜோடி செருப்பை போலீசார் கைப்பற்றினர். அந்த செருப்பை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த செருப்பை ஒரு வாலிபர் அணிந்து கொண்டு, அங்குள்ள ஒரு மதுபான விடுதிக்கு தனது நண்பர்கள் 2 பேருடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மதுகுடிக்க பணம் இல்லாததால்...

அப்போது அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜிதேஷ் என்பதும், அவருடன் வந்தது அவரது நண்பர்கள் கேவல் மற்றும் பிரேம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று மதுபான விடுதிக்கு சென்று மதுபானம் குடித்துள்ளனர்.

பின்னர் மேலும் மதுபானம் வாங்க பணம் இல்லாததால் அவர்கள் சாலைக்கு வந்து அவ்வழியாக சென்றவர்களை பிடித்து மிரட்டி பணம் பறித்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த முகமது கரீமையும் அவர்கள் பிடித்து பணம் பறிக்க முயன்றனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததால் அவரை 3 பேரும் சேர்ந்து தாக்கி படுகொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து ஜிதேஷ், கேவல் மற்றும் பிரேம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை வழக்கில் செருப்பை துருப்புச்சீட்டாக வைத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


Next Story