மைசூரு சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்


மைசூரு  சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்
x

மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் ராஜேந்திர பிரசாத் அறிவித்துள்ளார்.

மைசூரு:-

பயங்கரவாத அமைப்பினர்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹாமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தநிலையில் போர் நடைபெற்று வரும் இஸ்ரேலில் நர்சிங் படிப்பிற்காக சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள் என 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி தவிக்கிறார்கள்.

அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள ஜெருசலம், டெல் அவீப், அர்ஜிலியம், போன்ற பகுதிகளில் கன்னட மக்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது அந்த பகுதிகளில் போர் பதற்றம் இல்லாத காரணத்தால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கி தவிக்கும் கன்னடர்கள்

மேலும் இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இஸ்ரேல் நாட்டில் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் அதன் விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- இஸ்ரேல்- ஹாமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் நாட்டில் இருந்தால் உடனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிக்க வருபவர்கள் அந்த நபரின் பெயர், முழு விபரம், செல்போன் எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

மாநில அரசு ஏற்பாடு

இந்தியா தூதரக அலுவலகம் மூலமாக மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர்களை பத்திரமாக காப்பாற்றி இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு மாநில அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுவரை நஞ்சன்கூடுவை சேர்ந்த ஒருவர் மட்டும் இஸ்ரேல் நாட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.


Next Story
  • chat