ரூ.6 கோடிக்கு சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி


ரூ.6 கோடிக்கு சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி  தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
x

பெங்களூருவில் ரூ.6 கோடிக்கு சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த மா்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:

குழந்தை இதய நோயால் பாதிப்பு

பெங்களூரு சுங்கதகட்டே அருகே ஒய்சாலாநகரில் 32 வயது நபர் வசித்து வருகிறார். அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நபருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. அந்த குழந்தை இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது. தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக அந்த நபருக்கு பணம் தேவைப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அவரின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில், சிறுநீரகம் தானம் செய்ய விரும்புபவர்கள் வழங்கலாம், ஒரு சிறுநீரகத்திற்கு ரூ.6 கோடி வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் தனது சிறுநீரகத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். தனக்கு குறுந்தகவல் அனுப்பிய மா்மநபரை தொடர்பு கொண்டு சிறுநீரகம் தானம் செய்வதாகவும் கூறினார்.

சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி...

இதையடுத்து, சிறுநீரகம் தானம் செய்ய முன்கட்டணம் செலுத்த வேண்டும் மர்மநபர் கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்த அவர், மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு முதலில் ரூ.11,800-யை அனுப்பி வைத்தார். அதன்பிறகு, பல்வேறு காரணங்களை கூறி அந்த நபரிடம் இருந்து மர்மநபர் ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்தை வாங்கினார். பின்னர் மேலும் ரூ.77 ஆயிரம் கொடுக்கும்படி மர்மநபர் கேட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், தான் சிறுநீரகத்தை விற்பனை செய்யவில்லை, தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இதனால் அந்த மா்மநபர் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து விட்டார். மர்மநபர் தன்னிடம் சிறுநீரகத்தை வாங்குவதாக கூறி ரூ.1.72 லட்சத்தை மர்மநபர் மோசடி செய்ததை அவர் உணர்ந்தார். இதுகுறித்து மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story