தசரா யானைகளுக்கு இறுதிக்கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி


தசரா யானைகளுக்கு இறுதிக்கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி
x

மைசூருவில் தசரா யானைகளுக்கு 3-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது.

மைசூரு:

மைசூருவில் தசரா யானைகளுக்கு 3-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. மைசூரு நகரில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மைசூரு நகரம் களை கட்டி உள்ளது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் வருகிற 24-ந்தேதி விஜயதசமி அன்று நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக 14 யானைகள் மைசூருவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

அந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நடை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் யானைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இறுதிக்கட்ட பயிற்சி

தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவுக்கு கடந்த சில தினங்களாக பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் விண்ணை பிளக்கும் வகையில் மேள, தாளங்கள் முழங்கத்துடன் வாணவேடிக்கை நிகழ்த்தப்படும். இந்த சத்தத்தை கேட்டு யானைகள் மிரளாமல் இருக்க பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல், மைசூரு தசரா கண்காட்சி வாரிய வளாகத்தில் யானைகளுக்கு 2 கட்டமாக பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 3-வது மற்றும் இறுதிக்கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி நேற்று நடந்தது. இதில் தசரா யானைகள், குதிரைகள் முன்னிலையில் 21 முறை பீரங்கி குண்டு வெடிக்க செய்யப்பட்டது. இதில் முதல் முறை வெடிக்கும் போது யானைகள் சற்று மிரண்டன. இந்த தசரா விழாவுக்கு புதிதாக வந்த ரோகித் என்ற யானை, வெடி சத்தத்தை கேட்டு மிரண்டு சிறிது தூரம் ஓடியது. அந்த யானையை பாகன்கள் அசுவாசப்படுத்தினர். அதன்பிறகு எந்த யானையும், குதிரையும் வெடி சத்தத்தை கேட்டு மிரளாமல் அப்படியே நின்றன. யானைகள், குதிரைகளுக்கு பீரங்கி வெடி சத்த பயிற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.


Next Story