தார்வார்; அரசு பஸ் மோதி 16 வயது சிறுமி சாவு


தார்வார்; அரசு பஸ் மோதி 16 வயது சிறுமி சாவு
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

தார்வாரில் அரசு பஸ் மோதி 16 வயது சிறுமி இறந்தாள்.

உப்பள்ளி-

உத்தரகன்னடா மாவட்டம் தாண்டேரி தாலுகா முத்தோஸ் பகுதியை சேர்ந்தவர் அகமத் சலீம். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 16 வயதில் அர்ஷா என்ற மகளும் இருந்தனர். அர்ஷா, முத்தோஸ் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். இந்தநிலையில், தார்வார் (மாவட்டம்) தாலுகா அருகே உள்ள சலகினகொப்பா கிராமத்தில் நடந்த உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அகமத் முடிவு செய்தார்.

அதன்படி அவர் தனது குடும்பத்துடன் காரில் சலகினகொப்பா கிராமத்திற்கு வந்தார். அங்கு நிகழ்ச்சியில் அகமத் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதையடுத்து அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட காரை அகமது நிறுத்தினார். அப்போது அகமது மற்றும் அவரது மனைவி ஓட்டலுக்கு செல்ல சாலையை கடந்து சென்றனர்.

பின்னால் அர்ஷா வந்தாள். அப்போது அந்த வழியாக தாண்டேரியில் இருந்து சோலாப்பூர் நோக்கி வந்த அரசு பஸ் அர்ஷா மீது மோதியது. இதில் அவள் படுகாயம் அடைந்தாள். இதையடுத்து அவளை பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தார்வார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அர்ஷா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் குறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Next Story