மும்பை தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 லட்சம் பறிப்பு; போலி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது


மும்பை தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 லட்சம் பறிப்பு; போலி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது
x

மும்பையை சேர்ந்த தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 லட்சம் பறித்த போலி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

அச்சு எந்திரம்

மும்பையை சேர்ந்தவர் ராஜேந்திர கோட்டியான். தொழில் அதிபர். இந்த நிலையில் ராஜேந்திர கோட்டியான் அலுவலகத்தில் இருந்த அச்சு எந்திரம் பழுதடைந்தது. அந்த அச்சு எந்திரத்தை சரிசெய்ய அதை மும்பையில் இருந்து பெங்களூருவுக்கு ராஜேந்திர கோட்டியான் ஒரு வேனில் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் அந்த வேன் பெங்களூரு புறநகர் மாவட்டம் டாபஸ்பேட்டை பகுதியில் வந்தது.

அப்போது வேனை வழிமறித்த 2 பேர் தங்களை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் என்று கூறினர். மேலும் அச்சு எந்திரத்திற்கான ஆவணங்களை கேட்டனர். அப்போது ஆவணம் இல்லாதது தெரியவந்ததால் வாகனத்திற்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதிக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனால் ராஜேந்திர கோட்டியானுக்கு வேன் டிரைவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

கைது

அப்போது ராஜேந்திர கோட்டியானிடம் பேசிய 2 பேரும் வேனை பறிமுதல் செய்ய உள்ளதாகவும், வேனை விடுவிக்க ரூ.1.15 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதனால் இணையதளம் வழியாக ரூ.1.15 லட்சத்தை ராஜேந்திர கோட்டியான் அனுப்பி வைத்து உள்ளார். பின்னர் 2 பேர் மீதும் ஊழல் தடுப்பு படையில் ராஜேந்திர கோட்டியான் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் ஊழல் தடுப்பு படையினர் விசாரித்த போது ராஜேந்திர கோட்டியானிடம் பேசியது போலி ஜி.எஸ்.டி. அதிகாரிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு வடக்கு தாலுகா கோபாலபுராவை சேர்ந்த உதய்குமார், துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயை சேர்ந்த சதானந்தா ஆகியோரை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.


Next Story