மண்டியாவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்


மண்டியாவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2023 10:34 PM GMT (Updated: 26 Oct 2023 10:41 PM GMT)

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா:-

காவிரியில் தண்ணீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா, மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மண்டியா டவுன் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக காவிரி நீர் பாதுகாப்பு குழுவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று மண்டியா டவுனில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக மக்கள் மற்றும் சில அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜெயசாமராஜேந்திரா சர்க்கிளில் அவர்கள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கும், காவிரி ஒழுங்காற்று குழுவுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். காவிரியில் தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காவிரி ஒழுங்காற்று குழு பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.

டிராக்டர் பேரணி

இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து டிராக்டர்களில் பேரணியாக சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிளுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவிரி நீர் பாதுகாப்பு குழுவுருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்படுவதாக கோஷம் எழுப்பினர்.


Next Story