இந்துத்துவாவை பா.ஜனதாவுக்கு குத்தகைக்கு விடவில்லை; குமாரசாமி பேட்டி


இந்துத்துவாவை பா.ஜனதாவுக்கு குத்தகைக்கு விடவில்லை; குமாரசாமி பேட்டி
x

நாங்களும் இந்துக்கள் தான், இந்துத்துவாவை பா.ஜனதாவுக்கு குத்தகைக்கு விடவில்லை என குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

இந்துத்துவாவை பா.ஜனதாவுக்கு குத்தகைக்கு விடவில்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

நாங்களும் இந்துக்கள் தான்

பெங்களூரு தாசரஹள்ளியில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் ஜனதா மித்ரா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று கன்னடர்கள் விரும்புகின்றனர். கன்னடர்கள் ஆசியுடன் ஜனதாதளம் (எஸ்) ஆட்சி அமையும். நான் முதல்-மந்திரி ஆவேன். எனக்கு ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுக்க வேண்டும். தாசரஹள்ளி மட்டுமின்றி பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர்களை வாக்காளர்கள் வெற்றி அடைய வைக்க வேண்டும்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தூக்கத்தில் இருந்து விழித்து கொள்கின்றன. இந்துத்துவா என்ற பெயரில் மக்களை பா.ஜனதா தவறாக வழிநடத்துகிறது. நாங்களும் இந்துக்கள் தான். பா.ஜனதாவுக்கு இந்துத்துவாவை குத்தகைக்கு விடவில்லை. கோவில் கட்டுவதற்கு எங்கள் கட்சியை சேர்ந்த தாசரஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ. மஞ்சுநாத் அதிக நிதி உதவி செய்து உள்ளார். அவரை போல் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யாரும் கோவில் கட்ட நிதி உதவி வழங்கவில்லை. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்

இந்த அரசு கல்வி முறையை சீரழித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. ஏழைகள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாது. ஜனதாதளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் யு.கே.ஜி. முதல் பி.யூ.சி. வரை ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். ஒவ்வொரு வார்ட்டிலும் இலவச கிளினீக் திறப்போம். நான் முதல்-மந்திரியாக இருந்த போது தாசரஹள்ளி தொகுதிக்கு ரூ.720 கோடி ஒதுக்கி இருந்தேன்.

ஆனால் நான் பதவியை ராஜினாமா செய்த பின்னர் தாசரஹள்ளிக்கு ஒதுக்கிய நிதியை அரசு நிறுத்தியது. இதனால் நான் மஞ்சுநாத் எம்.எல்.ஏ.வை, எடியூரப்பாவிடம் அழைத்து சென்று நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் இன்று வரை முழுமையாக நிதி ஒதுக்கப்படவில்லை. மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு நிதி ஒதுக்குவதில் அரசு பாரபட்சம் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story