கர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் ரத யாத்திரை: மந்திரி சிவராஜ் தங்கடகி பேட்டி


கர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் ரத யாத்திரை: மந்திரி சிவராஜ் தங்கடகி பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:46 PM GMT)

கர்நாடகம் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கர்நாடக ரத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளதாக கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி கூறினார்.

பெங்களூரு:

கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகம் என்று பெயரிட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி ஓராண்டுக்கு கன்னடம் குறித்த நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். கர்நாடக ராஜ்யோத்சவாவை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் பொறுப்பு மந்திரிகளும், தாலுகா தலைநகரங்களில் எம்.எல்.ஏ.க்களும் கன்னட கொடியை ஏற்றுகிறார்கள். அனைத்து பள்ளி-கல்லூரிகளிலும் கன்னட கொடி ஏற்றப்பட வேண்டும்.

வருகிற 1-ந் தேதி பொதுமக்கள் தங்களின் வீடுகள் முன்பு சிவப்பு-மஞ்சள் நிற பொடிகளை கொண்டு கோலமிட வேண்டும். கர்நாடகம் என்ற பெயரை சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி 'உயிரானது கர்நாடகம்-பெயராகட்டும் கன்னடம்" என்ற பெயரை மக்கள் எழுத வேண்டும். 1-ந் தேதி காலை 9 மணிக்கு அனைத்து வானொலிகளிலும் கன்னடத்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும்.

அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை வழங்க வேண்டும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மக்கள் சொந்த ஊர்களில் சிவப்பு-மஞ்சள் பட்டங்களை விட வேண்டும். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு அனைவரும் தங்களின் வீடு, கடைகள் முன்பு கன்னட ஜோதியை எரிய விட வேண்டும். மேலும் கர்நாடக ரத யாத்திரை நடத்த உள்ளோம். இது மாநிலம் முழுவதும் ஓராண்டுக்கு நடத்தப்படும். இந்த ரத யாத்திரை அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும்.

இதற்கு தேவையான பாதை வரைபடம் தயாரிக்கப்படுகிறது. அனைத்து பள்ளி-கல்லூரிகளில் எனது மொழி-எனது பாட்டு என்ற பெயரில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. தாலுகா, மாவட்ட, வருவாய் மண்டலம் மற்றும் மாநில அளவில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன. குழந்தைகள் மத்தியில் கன்னட மொழி மற்றும் கர்நாடகம் குறித்து அபிமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இதன் நோக்கம். பெங்களூருவில் கன்னடத்தாய் புவனேஸ்வரி சிலையை நிறுவுகிறோம். மைசூருவில் முன்னாள் முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் சிலை அமைக்கப்படுகிறது.

இவ்வாறு சிவராஜ் தங்கடகி கூறினார்.


Next Story