விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி கைப்பாவையாக பயன்படுத்துகிறார்; சித்தராமையா கடும் தாக்கு


விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி கைப்பாவையாக பயன்படுத்துகிறார்; சித்தராமையா கடும் தாக்கு
x

எதிர்க்கட்சிகளை மிரட்ட விசாரணை அமைப்புகளை பிரதமர் மோடி கைப்பாவையாக பயன்படுத்துகிறார் என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.

பெங்களூரு:

விருப்பத்திற்கேற்ப...

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதை கண்டித்து காங்கிரசார் நேற்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

பிரதமர் மோடி, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தனது கைப்பாவையாக பயன்படுத்தி கொள்கிறார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை, சி.ஏ.ஜி., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை தனது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வைக்கிறார். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்ட பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்.

40 சதவீத கமிஷன்

வரலாற்றில் முன்பு எப்போதும் இவ்வாறு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை தவறாக பயன்படுத்தியது இல்லை. நாட்டின் வளர்ச்சி குறித்த விவரங்கள் யாருக்கும் கிடைக்காமல் செய்துள்ளனர். திட்ட ஆணையத்தை ரத்து செய்துவிட்டு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கி உள்ளனர். பிரதமர் மோடி ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சி செய்து வருகிறார்.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது பொய் வழக்குகளை போட்டு பிரதமர் மோடி மிரட்டுகிறார். அவர்களுக்கு தார்மிக ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர், பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷன் கேட்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதன் மீது மோடி நடவடிக்கை எடுத்தாரா?.

தனி மனிதர்கள் அல்ல

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் குண்டுகளுக்கே காங்கிரசார் பயப்பட்டது இல்லை. அதனால் மத்திய அரசின் மிரட்டும் போக்கை கண்டு காங்கிரசார் பயப்பட மாட்டார்கள். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தனி மனிதர்கள் அல்ல. அவர்களின் பின்னால் கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளனர். நாங்கள் பாறைகளை போல் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு ஆதரவாக நிற்கிறோம். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டிக்கிறோம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story