12 பேர் பலியான சம்பவம்: ஆற்றில் பாய்ந்த அரசு பஸ் வேகமாக செல்லவில்லை- அதிகாரி விளக்கம்


12 பேர் பலியான சம்பவம்:   ஆற்றில் பாய்ந்த அரசு பஸ் வேகமாக செல்லவில்லை- அதிகாரி விளக்கம்
x

ஆற்றில் பாய்ந்து 12 பேர் பலியான அரசு பஸ் வேகமாக செல்லவில்லை என அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் நேற்று காலை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜல்காவ் மாவட்டம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டம் கல்கோட் பகுதியில் உள்ள நர்மதை ஆற்றின் பாலத்தில் வந்தபோது, பஸ் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தறிகெட்டு ஓடிய பஸ் பாலத்தின் தடுப்புசுவரை இடித்து கொண்டு சுமார் 100 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் டிரைவா், கண்டக்டர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

பஸ் அதிவேகமாக சென்றதால் விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அதை மாநில போக்குவரத்து கழக அதிகாரி மறுத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "விபத்தில் சிக்கிய பஸ்சில் வாகன கண்காணிப்பு கருவி (வி.டி.எஸ்.) பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள தகவல்படி பஸ் விபத்தில் சிக்கியபோது 45 கி.மீ. வேகத்தில் தான் சென்று உள்ளது. எனவே பஸ் வேகமாக செல்லவில்லை என்பது தெரியவந்து உள்ளது. எனவே விபத்திற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

------------


Next Story