விவசாயியிடம் ரூ.13 லட்சம் மோசடி- கணவன்-மனைவிக்கு வலைவீச்சு


விவசாயியிடம் ரூ.13 லட்சம் மோசடி- கணவன்-மனைவிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:46 PM GMT)

மகன்களுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மும்பை,

மகன்களுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ரெயில்வேயில் வேலை

லாத்தூரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு உறவினர் ஒருவர் மூலமாக தம்பதி அறிமுகமாகினர். இந்த தம்பதி தங்களுக்கு மத்திய ரெயில்வே துறை அதிகாரிகளுடன் நன்கு தொடர்பு இருப்பது போல விவசாயியிடம் காட்டிக்கொண்டனர். மேலும் விவசாயியின் 2 மகன்களுக்கும் மத்திய ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதற்காக ரூ.17 லட்சம் கேட்டதாக தெரிகிறது. அவர்களின் பேச்சை முழுமையாக நம்பிய விவசாயி ரூ.6 லட்சத்தை முதல்கட்டமாக அவர்களிடம் கொடுத்தார். மீதமுள்ள தொகை பல்வேறு தவணைகளில் கட்டிவந்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் விவசாயிக்கு நம்பிக்கையை ஏற்படுத்த அவரது மகன்களில் ஒருவரை நேர்காணலுக்காக சி.எஸ்.எம்.டி. கட்டிடத்திற்கு தம்பதி அழைத்தனர். அங்கு மேலும் சில வாலிபர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டதாக தெரிகிறது.

வழக்குப்பதிவு

இப்படி விவசாயியிடம் இருந்து ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் வரை சுருட்டிய தம்பதி பின்னர் அவரது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பதை நிறுத்திவிட்டனர். மேலும் விவசாயியை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து விவசாயி போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தம்பதி மீது மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story