பணியின் போது போலீஸ்காரரை தாக்கிய 2 பேருக்கு கடுங்காவல்; பேலாப்பூர் கோர்ட்டு தீர்ப்பு


பணியின் போது போலீஸ்காரரை தாக்கிய 2 பேருக்கு  கடுங்காவல்; பேலாப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Aug 2023 7:15 PM GMT (Updated: 8 Aug 2023 7:16 PM GMT)

போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 2 பேருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து பேலாப்பூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மும்பை,

போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 2 பேருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து பேலாப்பூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தாக்குதல்

நவிமும்பை வாஷி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவர்களை மறித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். இதனைக்கண்ட போலீஸ்காரர் ஒருவர் அவர்களை விரட்டி சென்றபோது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

2 ஆண்டு கடுங்காவல்

இதனைக்கண்ட மற்ற போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட சச்சின் சிக்காரே (வயது44), நரேஷ் போபட் (45) ஆகியோர் மீது பேலாப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டில் 5 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையில், பணியின் போது போலீசாரை தாக்கிய குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து 2 பேருக்கும் தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


Next Story