குஜராத்தில் இருந்து மும்பைக்கு ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வந்த 2 பேர் கைது; போலீசார் தீவிர விசாரணை


குஜராத்தில் இருந்து மும்பைக்கு ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வந்த 2 பேர் கைது; போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:47 PM GMT)

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு ரூ.50 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் பூஜ் பகுதியை சேர்ந்த 2 பேர் கள்ளநோட்டுகளுடன் மும்பைக்கு வர இருப்பதாக நவிமும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கார்கர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் 2 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் பூஜ் பகுதியை சேர்ந்த உஸ்மான் சாகா(வயது40), அப்துல் ஹசன்(41) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனை போட்டதில் கத்தை, கத்தையாக பணநோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

2 பேர் கைது

500 ரூபாய் மதிப்புள்ள 9 ஆயிரத்து 981 நோட்டுகள் இருந்தது. போலீசார் அவற்றை ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் கள்ள ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.49 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளநோட்டுகளை கொண்டு வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த கள்ளநோட்டுகளை அவர்கள் மும்பையில் புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள வேறு யாேரனும் மும்பையில் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story