பணத்தகராறில் ஷிண்டே அணி பிரமுகரை கொன்ற 4 பேர் கைது
பணத்தகராறு தொடர்பாக ஷிண்டே சிவசேனா அணி பிரமுகரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
பணத்தகராறு தொடர்பாக ஷிண்டே சிவசேனா அணி பிரமுகரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் புகார்
தானே வசந்த்விகார் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் துபே. இவர் அப்பகுதியில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணியின் கிளைத்தலைவராக இருந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி ஆகாஷ் துபே காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் மான்பாடா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் அவரை தேடிவந்தனர். நேற்று முன்தினம் சிதல்சர் கொங்கனி பாடா பகுதியில் காட்டில் பாதி உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
4 பேர் கைது
இதில், கைப்பற்றப்பட்ட உடல் காணாமல் போன ஆகாஷ் துபே என்பது தெரியவந்தது. இவரை மர்மநபர்கள் கொலை செய்து நகைகளை பறித்துக்கொண்டு உடலை எரித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் கொலையாளிகள் 4 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய குருநாத் ஜாதவ் (27), கரண் சவாரா (24), பிரசாந்த் (21) உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்தகராறு காரணமாக அவரை கொலை செய்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.