கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான 5 பேருக்கு 22-ந் தேதி வரை போலீஸ் காவல்


கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான 5 பேருக்கு 22-ந் தேதி வரை போலீஸ் காவல்
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:45 PM GMT)

கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான 5 பேருக்கு 22-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

மும்பை தாதர் கிழக்கு பகுதியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையேயான டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சூதாட்டம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்று நடத்திய சோதனையில் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்ட தகிசரை சேர்ந்த பிரான்சிஸ் மற்றும் நய்காவை சேர்ந்த இம்ரான் கான் ஆகிய 2 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், லேப்டாப், ரொக்கம் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

மேலும் அங்கிருந்த டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்பேரில் தர்மேஷ் வோரோ, சிவ்தாசனி, அவரது சகோதரர் கவுரவ் ஆகியோர் சிக்கினர். இவர்கள் சூதாட்டத்தில் கிடைத்த பணத்தை ஹவாலா மூலம் துபாய்க்கு பரிமாற்றம் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் நிழலுலக தாதாக்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்தனர். பி்ன்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 22-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story