சோலாப்பூர் அருகே கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
புனே,
டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
கரும்பு அறுவடை பணி
சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கரும்பு அறுவடை பணிக்காக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல தொழிலாளிகள் டிராக்டரில் ஏறி சென்றனர்.
கர்காம்ப் கிராமம் அருகே சென்றபோது டிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அருகே உள்ள கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
5 பேர் பலி
இதில் டிராக்டரில் அமர்ந்து பயணித்த தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதனை அறிந்த கிராமமக்கள் அங்கு சென்று தொழிலாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் விரைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் 3 பெண்கள், குழந்தை என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. காயமடைந்த மற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






