கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை


கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 17 March 2023 6:45 PM GMT (Updated: 17 March 2023 6:46 PM GMT)

6 டன் கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போதைதடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மும்பை,

6 டன் கஞ்சா கடத்தி வந்த 5 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போதைதடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ரகசிய தகவல்

நாக்பூர் மண்டல பிரிவு வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு, ராய்ப்பூர் சந்தோஷி நகர் சவுக் பகுதியில் இருந்து மராட்டியத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எல்லை பகுதியில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது இளநீர் ஏற்றி வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் வழிமறித்தனர்.

லாரியில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் இளநீர் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பிரித்து சோதனை போட்டனர்.

20 ஆண்டு சிறை தண்டனை

அங்கு 6 டன் எடையுள்ள கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.9 கோடியே 81 லட்சம் ஆகும். இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மேலும் 2 பேர் சிக்கினர். இவர்கள் மீது போதைதடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையின் போது 5 பேரின் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story