டெம்போ- கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி


டெம்போ- கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
x

பீட் மாவட்டத்தில் டெம்போ- கார் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

மும்பை,

பீட் மாவட்டத்தில் டெம்போ- கார் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

திருமணத்திற்கு சென்றனர்

புனேயில் வசித்து வந்தவர் ராம்ஹரி குதே(வயது40). இவர் அதிகாலை பீட் மாவட்டம் கேஜ் தாலுகாவில் உள்ள சொந்த ஊரான ஜிவாக்சிவாடியில் நடந்த உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் காரில் சென்றார். ராம்ஹரி குதே குடும்பத்தினர் சென்ற கார் 7 மணியளவில் பீட் மாவட்டம் மன்ஜார்சும்பா- படோடா நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த டெம்போவும், காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் காரும், டெம்போவும் சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதின. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

6 பேர் பலி

மேலும் காரில் இருந்த ராம்ஹரி குதே, அவரது குடும்பத்தை சேர்ந்த சுனிதா(38), ருஷிகேஷ்(19), ஆகாஷ்(15), பிரியங்கா மற்றும் உறவினர் ராதிகா (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் கிரேன் மூலம் டெம்போவுடன் சிக்கியிருந்த காரை மீட்டனர். மேலும் காரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்து தப்பியோடிய டெம்போ டிரைவர் படோடா போலீசில் சரணடைந்தார்.

போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீட் மாவட்டத்தில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story