புனேயில் உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த ஊழியர் கைது


புனேயில் உணவு டெலிவரி செய்ய சென்ற இடத்தில் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த ஊழியர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2022 9:45 PM GMT (Updated: 20 Sep 2022 9:45 PM GMT)

புனேயில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

புனே,

புனேயில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த உணவு டெலிவரி செய்யும் ஊழியரை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆன்லைனில் உணவு ஆர்டர்

மராட்டிய மாநிலம் புனே கோந்துவா பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 17-ந்தேதி இரவு 9 மணி அளவில் ஆன்லைனில் உணவு பார்சல் ஆர்டர் செய்தார். இந்த பார்சலை ரயீஸ் சேக் (வயது40) என்ற ஊழியர் கொண்டு வந்தார். வீட்டிற்கு வந்த அவர் பார்சலை கொடுத்து விட்டு மாணவியிடம் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டு உள்ளார்.

பின்னர் மாணவியிடம் சொந்த ஊர் மற்றும் கல்லூரி தொடர்பாக பேச்சு கொடுத்தார். மேலும் மாணவியின் உறவினர் தனக்கு நன்றாக தெரியும் எனவும், எதுவும் தேவைப்பட்டால் தன்னிடம் தெரிவிக்குமாறு கூறினார்.

மானபங்கம் செய்த நபர் கைது

இதனை தொடர்ந்து மீண்டும் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டதால் மாணவி வீட்டிற்குள் சென்றார். அப்போது பின்தொடர்ந்த ரயீஸ் சேக் மாணவியின் கையை பிடித்து மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டதால் ரயீஸ் சேக் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தப்பி ஓடிய ரயீஸ் சேக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மாணவி கொடுத்த புகாரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story