விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரவு நேர பெஸ்ட் பஸ் சேவை; இன்று முதல் 27-ந் தேதி வரை இயக்கப்படுகிறது

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரவு நேர பெஸ்ட் பஸ் சேவை; இன்று முதல் 27-ந் தேதி வரை இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 19 Sept 2023 12:30 AM IST (Updated: 19 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பெஸ்ட் குழுமம் சார்பில் மும்பையில் இரவு நேர பஸ் சேவை இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.

மும்பை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பெஸ்ட் குழுமம் சார்பில் மும்பையில் இரவு நேர பஸ் சேவை இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இரவு நேர சேவை

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மும்பையில் ஆயிரக்கணக்கிலான மண்டல்களில் வெவ்வேறு வடிவங்களில் கணபதி சிலை வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இதனால் தரிசனத்திற்காக பக்தர்கள் இரவு பகலாக சென்று வருவது உண்டு. இதனை கருத்தில் கொண்டு பெஸ்ட் குழுமம் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை இரவு நேர சேவையை தொடங்க உள்ளது.

பஸ் செல்லும் இடங்கள்

இது தொடர்பாக பெஸ்ட் குழுமம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பக்தர்களின் தரிசனத்திற்காக குறிப்பிட்ட இடங்களில் இரவு நேர பஸ் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் இரவு 11 மணி அளவில் தொடங்கி காலை 6 மணி வரை இயக்கப்படும். சி.எஸ்.எம்.டி,- சயான், ஒர்லி- காலாசவுக்கி, நாக்பாடா- ஓஷிவாரா மற்றும் சிவாஜி நகர், சிவ்ரி- தின்தோஷி, பைதோனி- விக்ரோலி, மியூசியம்- தேவ்னார் மற்றும் சிவ்ரி, கிர்காவ் சாண்ட்ஹர்ஸ்ட் ரோடு ஆகிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story