புனே 'கூகுள்' அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- ஊழியரின் சகோதரர் கைது

தம்பியுடன் ஏற்பட்ட சொத்து தகராறில் புனே கூகுள் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஊழியரின் சகோதரர் சிக்கினார்.
மும்பை,
தம்பியுடன் ஏற்பட்ட சொத்து தகராறில் புனே கூகுள் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஊழியரின் சகோதரர் சிக்கினார்.
வெடிகுண்டு மிரட்டல்
மும்பை பி.கே.சி. பகுதியில் கூகுள் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மர்மநபர் போன் செய்தார். அவர், புனேயில் உள்ள கூகுள் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்தார்.
இதுதொடர்பாக மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மும்பை போலீசார் கொடுத்த தகவலின் பேரில் புனே போலீசார் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல், செயலிழப்பு பிரிவினருடன் முந்த்வா பகுதியில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்துக்கு விரைந்தனர். அவர்கள் நள்ளிரவு வரை அடுக்குமாடி கட்டிடத்தின் 11-வது மாடியில் உள்ள கூகுள் அலுவலகத்தில் சல்லடை போட்டு தேடினர்.
ஆனால் அலுவலகத்தில் வெடிப்பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால் புரளியை கிளப்ப வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.
ஐதராபாத்தில் கைது
இதுதொடர்பாக மும்பை பி.கே.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 48 வயது நபர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் தம்பி புனே கூகுள் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தம்பிக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் குடிபோதையில் இருந்தபோது மும்பை கூகுள் அலுவலகத்துக்கு போன், புனே அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்து உள்ளது.






