கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆட்டோ கவிழ்ந்து மாநகராட்சி அதிகாரி பலி; மற்றொரு விபத்தில் வாகனம் மோதி காவலாளி சாவு


கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆட்டோ கவிழ்ந்து மாநகராட்சி அதிகாரி பலி; மற்றொரு விபத்தில் வாகனம் மோதி காவலாளி சாவு
x
தினத்தந்தி 2 Oct 2023 7:00 PM GMT (Updated: 2 Oct 2023 7:00 PM GMT)

கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆட்டோ கவிழ்ந்து மாநகராட்சி அதிகாரி பலியானார். மற்றொரு விபத்தில் வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தார்.

மும்பை,

கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஆட்டோ கவிழ்ந்து மாநகராட்சி அதிகாரி பலியானார். மற்றொரு விபத்தில் வாகனம் மோதி காவலாளி உயிரிழந்தார்.

மாநகராட்சி அதிகாரி பலி

மும்பை மாநகராட்சி பைகுல்லா இ வார்டு அலுவலகத்தில் சீனியர் லைசென்ஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் பாகரே. தானேயில் வசித்து வந்த இவர், சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் பயணம் செய்தார். கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை விக்ரோலி அருகே சென்றபோது எதிர்பாராவிதமாக ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் தூக்கிவீசப்பட்ட மாநகராட்சி அதிகாரி மகேஷ் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு முல்லுண்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் சகாதேவ் படேல் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மற்றொரு விபத்து

கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் படுகாயத்துடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்தவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் பலியானவர் மும்பை குர்லாவை சேர்ந்த முகமது இசானுல்லா(வயது35) என்பதும், விக்ரோலி பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story