கர்நாடக அரசு வக்கீலிடம் பணமோசடி செய்த தம்பதி கைது


கர்நாடக அரசு வக்கீலிடம் பணமோசடி செய்த தம்பதி கைது
x
தினத்தந்தி 13 Aug 2023 7:45 PM GMT (Updated: 13 Aug 2023 7:45 PM GMT)

கர்நாடகா அரசு வக்கீலை ஏமாற்றி பணமோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

கர்நாடகா அரசு வக்கீலை ஏமாற்றி பணமோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

அரசு வக்கீல்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 39 வயது அரசு வக்கீலுக்கு, கடந்த ஜனவரி மாதம் தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்த பாத்திமா சேக் என்ற பெண் அறிமுகமானார். தனது வழக்கு தொடர்பாக அப்பெண் வக்கீலை சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது தனது மாமனாரின் உடல் நலக்குறைவு மற்றும் குடும்ப பிரச்சினையை காரணம் காட்டி பல முறை அவரிடம் நிதி உதவி பெற்றுள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி அரசு வக்கீலை மும்பைக்கு வரும்படி பாத்திமா சேக் அழைப்பு விடுத்தார். இதனை நம்பிய அரசு வக்கீலும் மும்பை மலாடில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றார்.

தம்பதி கைது

அப்போது வக்கீல் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை வாங்கிய பாத்திமா சேக் அதில் செல்பி எடுத்துள்ளார். பின்னர் கழிவறை செல்வதாக கூறிவிட்டு பாத்திமா சேக் செல்போனுடன் தலைமறைவானார். இதையடுத்து அரசு வக்கீல் அந்த பெண்ணின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சென்று செல்போனை திரும்ப பெற்றார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரம் வரையில் பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. பெண் அந்த பணத்தை திருப்பி தர மறுத்ததால் சம்பவம் குறித்து பங்கூர்நகர் போலீசில் அரசு வக்கீல் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பாத்திமா சேக்கை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவரும் பிடிபட்டார். பிடிபட்ட கணவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரியவந்தது.


Next Story