பிரதமர் அல்லது மந்திரி ஆக விரும்பவில்லை; 'மக்களுக்கு சேவை செய்யவே உழைக்கிறேன்' - வயது சர்ச்சைக்கு சரத்பவார் பதிலடி


பிரதமர் அல்லது மந்திரி ஆக விரும்பவில்லை; மக்களுக்கு சேவை செய்யவே உழைக்கிறேன் - வயது சர்ச்சைக்கு சரத்பவார் பதிலடி
x
தினத்தந்தி 9 July 2023 12:30 AM IST (Updated: 9 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் அல்லது மந்திரியாக விரும்பவில்லை, மாறாக மக்களுக்கு சேவை செய்யவே உழைக்கிறேன் என்று வயது சர்ச்சை பிரச்சினைக்கு சரத்பவார் பதிலடி கொடுத்தார்

மும்பை,

பிரதமர் அல்லது மந்திரியாக விரும்பவில்லை, மாறாக மக்களுக்கு சேவை செய்யவே உழைக்கிறேன் என்று வயது சர்ச்சை பிரச்சினைக்கு சரத்பவார் பதிலடி கொடுத்தார்

வயது சர்ச்சை

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் கடந்த 2-ந் தேதி கட்சியை உடைத்து ஆளும் சிவசேனா-பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தனது அணியின் பலத்தை நிரூபிக்க கூட்டிய கூட்டத்தில் அஜித்பவார் பேசுகையில், "பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். சரத்பவாருக்கு தற்போது வயது 83. அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். எங்களுக்கு ஆசி வழங்க வேண்டும். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்" என்றார். அஜித்பவார் எழுப்பிய இந்த வயது சர்ச்சை பிரச்சினை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரத்பவார் பதில்

இதுதொடர்பாக நேற்று சரத்பவார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மொராஜி தேசாய் எந்த வயதில் பிரதமர் ஆனார் என உங்களுக்கு தொியுமா?. நான் பிரதமர் அல்லது மந்திரி ஆக விரும்பவில்லை. மக்களுக்காக சேவை செய்யவே விரும்புகிறேன். 'நான் சோர்வடையவும் மாட்டேன், ஓய்வு பெறவும் மாட்டேன்' என வாஜ்பாய் கூறியிருந்தார். என்னை ஓய்வு பெற சொல்ல அவர் யார்?. என்னால் இப்போதும் வேலை செய்ய முடியும். கட்சி தொண்டர்கள் விரும்புவதால் அவர்களுக்காக தொடர்ந்து வேலை செய்வேன்.

துணை முதல்-மந்திரி ஆக்கினேன்

அஜித்பவாரை நான் ஓரங்கட்டியதாக கூறப்படுவது குறித்து நான் பேசவிரும்பவில்லை. குடும்ப விவகாரத்தை வெளியில் பேசுவது எனக்கு பிடிக்காது. நான் அஜித்பவாரை மந்திரியாகவும், துணை முதல்-மந்திரியாகவும் ஆக்கினேன். வாய்ப்பு இருந்தும் எனது மகள் சுப்ரியா சுலேக்கு எந்த மந்திரி பதவியையும் நான் வழங்கியதில்லை. மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்கும் போதும் கூட மற்றவர்களை தான் மந்திரி ஆக்கி உள்ளேன். சுப்ரியா சுலே எம்.பி.யாக இருந்த போதும் கூட அவரை மந்திரியாக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே கட்சி உடைந்த நிலையில் சரத்பவார் நேற்று மந்திரி சகன்புஜ்பாலின் சொந்த ஊரான நாசிக் மாவட்டம் ஏவ்லாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை சந்தித்து பேசினார்.

1 More update

Next Story