குளத்தில் மூழ்கி தங்கையுடன் டாக்டர் பலி


குளத்தில் மூழ்கி தங்கையுடன் டாக்டர் பலி
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:45 PM GMT)

டோம்பிவிலியில் நாயை குளிப்பாட்ட சென்ற இடத்தில் குளத்தில் மூழ்கி டாக்டர் மற்றும் அவரது தங்கை பலியானார்கள்.

மும்பை,

டோம்பிவிலியில் நாயை குளிப்பாட்ட சென்ற இடத்தில் குளத்தில் மூழ்கி டாக்டர் மற்றும் அவரது தங்கை பலியானார்கள்.

தண்ணீரில் மூழ்கினர்

டோம்பிவிலி உமேஷ் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது23). எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு நவிமும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருந்தார். இவரது தங்கை கீர்த்தி (17). 12-ம் வகுப்பு முடித்து உள்ளார். அண்ணன், தங்கை 2 பேரும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை டோம்பிவிலி, காவ்தேவி கோவில் அருகில் உள்ள தாவ்டி குளத்தில் நாயை குளிப்பாட்ட செல்வார்கள்.

நேற்று முன்தினமும் வழக்கம் போல 2 பேரும் நாயுடன் குளத்துக்கு சென்றனர். கீர்த்தி, குளத்தில் நாயை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். அவரை காப்பாற்ற ரஞ்சித்தும் குளத்தில் குதித்தார். துரதிருஷ்டவசமாக அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

2 பேரும் மூழ்கியதை பார்த்து நாய் கரைக்கு வந்து சத்தமாக குரைத்தது. அந்த வழியாக சென்றவர்கள், நாய் இடைவிடாமல் குரைப்பதை கேட்டு குளத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது நாய் குளத்தை நோக்கி குரைத்து கொண்டே இருந்தது. உடனடியாக உள்ளே யாரோ மூழ்கியதை உணர்ந்த பொது மக்கள் கல்யாண் டோம்பிவிலி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அண்ணன், தங்கையான ரஞ்சித், கீர்த்தியை பிணமாகத் தான் மீட்க முடிந்தது. 2 பேரும் குளத்தில் சகதியில் சிக்கி கொண்டதால் வெளியே வர முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தீயணைப்பு வீரர் ஒருவர் கூறினார்.

நாயை குளிப்பாட்ட சென்ற இடத்தில் அண்ணன், தங்கை குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story