நாசிக் திரிம்பகேஸ்வர் கோவிலுக்குள் பிற மதத்தினர் நுழைய முயன்றது குறித்து விசாரணை- பட்னாவிஸ் உத்தரவு

நாசிக் திரிம்பகேஸ்வர் கோவிலுக்குள் பிற மதத்தினர் நுழைய முயன்ற சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,
நாசிக் திரிம்பகேஸ்வர் கோவிலுக்குள் பிற மதத்தினர் நுழைய முயன்ற சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
நாசிக் சிவன் கோவில்
நாசிக்கில் பிரசித்தி பெற்ற திரிம்பகேஷ்வர் சிவன் கோவில் உள்ளது. நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த கோவிலுக்குள் செல்ல பிறமதத்தினருக்கு அனுமதி இல்லை. கடந்த 13-ந் தேதி பிற மதத்தினர் சிலர் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை கோவில் காவலாளிகள் தடுத்து நிறுத்தினர். கோவில் நிர்வாகிகள் உள்ளே நுழைய எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பிற மதத்தினர் உள்ளே செல்லாமல் திரும்பி சென்றனர்.
தவறான புரிதல் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக நாசிக் ஊரகப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சாகாஜி உமப் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே பிற மதத்தினர் நாசிக் கோவிலுக்குள் நுழைய முயன்ற காட்சி சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல அகமத்நகர், அகோலா உள்ளிட்ட இடங்களில் 2 மதத்தினர் இடையே மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
எஸ்.ஐ.டி. விசாரணை
இந்தநிலையில் நாசிக் கோவிலுக்குள் பிற மதத்தினர் நுழைய முயன்ற சம்பவம் குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக துணை முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில்:-
திரிம்பகேஸ்வர் கோவிலுக்குள் பிரதான வாயில் வழியாக கும்பல் நுழைய முயன்ற சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். இந்த ஆண்டு நடந்த சம்பவம் மட்டுமில்லாமல், கடந்த ஆண்டும் இதேபோல நடந்த சம்பவம் குறித்து எஸ்.ஐ.டி. விசாரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






