பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை செயற்கை குளங்களில் தான் கரைக்க வேண்டும்- மாநகராட்சி உத்தரவு

பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை செயற்கை குளங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை செயற்கை குளங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலை
மும்பையில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் ஆகஸ்ட் 31-ந் தேதி தொடங்குகிறது. விநாயகர் சதுர்த்திக்கு அதிகளவில் பி.ஓ.பி. எனப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாராகும் சிலைகள் தான் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த சிலைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டு பிளாஸ்டர் ஆப் பாரிசில் தயாரான விநாயகர் சிலைகளை கடல், நீர் நிலைகளில் கரைக்க மும்பை மாநகராட்சி தடை விதித்து உள்ளது. மேலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை மாநகராட்சியால் அமைக்கப்படும் செயற்கை குளங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு தடை
இதேபோல அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. களிமண் போன்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிலைகளை மட்டுமே வாங்கவும், விற்பனை செய்யவும் கட்டாயமாக்க உள்ளது.
இதேபோல இந்த ஆண்டு வீடுகளில் 2 அடி உயரம் வரை சிலைகள் பிரதிஷ்டை செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. பொது இடங்கள், மண்டல்களில் முடிந்த வரை சிறிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்யுமாறு மாநகராட்சி கேட்டு கொண்டு உள்ளது.
----
Reporter : M.SELVARAJ Location : Mumbai - Mumbai






