ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுத அனுமதி கோரிய மாணவரின் மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு


ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுத அனுமதி கோரிய மாணவரின் மனு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:45 PM GMT)

கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுந்த அனுமதிகோரிய வாலிபரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பை,

கிராமத்தில் மின்சாரம் இல்லாததால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி ஜே.இ.இ நுழைவுத்தேர்வு எழுந்த அனுமதிகோரிய வாலிபரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஐகோர்ட்டில் மனு

இந்திய தொழில்நுட்ப கழகம்( ஐ.ஐ.டி.) நாட்டிலேயே தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி மையமாக விளங்குகிறது. அதில் சேருவதற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வை எழுத அனுமதிக்குமாறு மாணவர் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர், "தான் கிராம பகுதியில் வசிப்பதாகவும், அங்கு அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆன்லைனில் தேர்வுக்கு பதிவு செய்ய முடியவில்லை. எனவே விண்ணப்பத்தை ஏற்றுகொண்டு, ஜூன் 4-ந் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வில் தன்னை அனுமதிக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.

ஆனால் ஐ.ஐ.டி. சேர்க்கை வாரியம் தங்கள் பதிவின்படி, காலக்கெடு முடிந்த ஒரு நாளுக்கு பிறகு தான் ஆன்லைன் படிவத்தை நிரப்ப தேசாய் முதல்-முறையாக முயற்சி செய்ததாக கூறியிருந்தது. இருதரப்பையும் விசாரித்த நீதிபதிகள் அபய் அகுஜா மற்றும் மலிந்த் சதாயே ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

மாணவர்கள் தேர்வு

ஐ.ஐ.டி. மாணவர்கள் தேர்வு முறை ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டது. இணைய கோளாறு மற்றும் மின்வெட்டு போன்ற சிரமங்களை கருதி அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு செய்ய நீண்ட கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அவர் சிறந்த இணைய இணைப்பு மற்றும் மின்சாரம் உள்ள இடத்திற்கு செல்ல போதுமான நேரம் இருந்தது. எனவே வாலிபர் கூறிய காரணங்களை ஏற்க முடியவில்லை. லட்சக்கணக்கான திறமையான மாணவர்களின் நலனுக்காக நிறுவனம் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்தை சீர்குலைக்க முடியாது. எனவே கோர்ட்டு வாலிபரின் மனுவை தள்ளுபடி செய்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story