விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கத்துடன் கணவன்-மனைவி கைது; கோவைக்கு கடத்த முயன்றபோது சிக்கினர்


விமான நிலையத்தில் ரூ.1½ கோடி தங்கத்துடன் கணவன்-மனைவி கைது; கோவைக்கு கடத்த முயன்றபோது சிக்கினர்
x
தினத்தந்தி 14 Sept 2023 12:30 AM IST (Updated: 14 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் தங்கத்தை கடத்தி செல்ல முயன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கத்தை கோவைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் தங்கத்தை கடத்தி செல்ல முயன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கத்தை கோவைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

தம்பதி சிக்கினர்

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை டெர்மினல் 2-ம் பகுதியில் ஒரு தம்பதி சந்தேகப்படும்படி நடமாடியதை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கண்டனர். மேலும் அங்கு கிடந்த கருப்பு பையை தம்பதி எடுத்து கொண்டு உள்நாட்டு விமான நிலையம் நோக்கி சென்றனர். இதில் சந்தேகம் வலுத்ததால் வீரர்கள் தம்பதியை வழிமறித்து அவர்கள் வைத்திருந்த பையை கைப்பற்றினர். அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பேஸ்ட் வடிவிலான 2.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். இதையடுத்து தம்பதியை போலீசில் ஒப்படைத்தனர்.

மற்றொரு பயணிக்கு வலைவீச்சு

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர். இவர்கள் ஜலாலுதீன் மற்றும் அவரது மனைவி ஹாஜிதா பேகம் எனவும், கோவைக்கு செல்லும் விமானத்தில் தங்கத்தை கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது. சர்வதேச போர்டிங் கேட் எண் 86-ம் பகுதியில் இருந்து பயணி ஒருவர் தங்க பேஸ்ட் இருந்த பையை வீசி சென்றது தெரிவந்தது. அந்த பையை எடுத்து சென்ற தம்பதி போலீசில் சிக்கி உள்ளனர். இதனால் பையை வீசி சென்றவர் மற்றும் தம்பதிக்கு இடையே உள்ள தொடர்பு, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story