மும்பை மாநகராட்சி ஊழல் பற்றி விசாரிக்க விரும்பினால் 'பி.எம். கேர்ஸ்' நிதியை பற்றியும் விசாரிக்க வேண்டும் - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்


மும்பை மாநகராட்சி ஊழல் பற்றி விசாரிக்க விரும்பினால் பி.எம். கேர்ஸ் நிதியை பற்றியும் விசாரிக்க வேண்டும் - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:45 PM GMT)

மும்பை மாநகராட்சி ஊழல் பற்றி விசாரிக்க விரும்பினால் ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை பற்றியும் விசாரிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

மும்பை,

மும்பை மாநகராட்சி ஊழல் பற்றி விசாரிக்க விரும்பினால் 'பி.எம்.கேர்ஸ்' நிதியை பற்றியும் விசாரிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரரும், லோக்மத் குழுவின் நிறுவனருமான ஜவகர்லால் தர்தாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

உலகம் பாராட்டியது

உலகமே கொரோனா வைரசின் பிடியில் போராடிக்கொண்டு இருந்தபோது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முன்மாதிரியை மும்பை தான் வழங்கியது. மும்பையில் மாநில அரசு செய்த பணியை உலகமே பாரட்டியபோதும் அதை பாராட்டும் அளவுக்கு பெரிய மனது உங்களிடம் (பா.ஜனதா) இல்லை. உங்களால் பாராட்ட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் ஏன் நாங்கள் செய்த வேலையை அவதூறு செய்கிறீர்கள்?, மராட்டியம் மற்றும் மும்பை பாராட்டப்பட்ட காரணத்தால் அவர்கள் அவதூறு செய்ய தொடங்கிவிட்டனர்.

மக்கள் அறிய வேண்டும்

உங்கள் கூற்றுப்படி மும்பை மாநகராட்சியில் ஊழல் நடந்ததாக கூறி விசாரணைக்கு முற்பட்டால், 'பி.எம். கேர்ஸ்' நிதியை பற்றியும் விசாரிக்க வேண்டும். ஏனெனில் அது மக்களின் பணம், அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை மக்கள் அறிய வேண்டும். இது ஒரு மோசடியாக இருக்க முடியாதா? இவ்வாறு அவர் பேசினார். மேலும் பா.ஜனதாவை கேலி செய்த அவர், "இந்திய சுதந்திர போராட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லாத சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் தான் இப்போது நாட்டை ஆளுகின்றனர்" என்றார்.

ஷிண்டே- அஜித்பவார் மீது சாடல்

மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி அஜித்பவாரை மறைமுகமாக சாடிய உத்தவ் தாக்கரே, "சிலருக்கு எதையும் உருவாக்கும் திறன் இல்லை. ஆனால் மற்றவர்கள் உருவாக்கி வைத்ததை கொள்ளை அடிக்கின்றனர்" என்றார் ஜம்போ கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி உத்தவ் சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story