வாலிபரை கொன்று உடல் ஆற்றில் வீச்சு- காதலியின் தந்தை உள்பட 7 பேர் கைது


வாலிபரை கொன்று உடல் ஆற்றில் வீச்சு- காதலியின் தந்தை உள்பட 7 பேர் கைது
x

வாலிபரை கடத்தி கொன்று உடலை கோதாவரி ஆற்றில் வீசிய வழக்கில் காதலியின் தந்தை உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

புனே,

வாலிபரை கடத்தி கொன்று உடலை கோதாவரி ஆற்றில் வீசிய வழக்கில் காதலியின் தந்தை உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசில் புகார்

அகமதுநகர் மாவட்டம் ஸ்ரீராம்பூர் தாலுகா போகர் கிராமத்தை சேர்ந்தவர் தீபக் (வயது31). இவர் அதே கிராமத்தை சேர்ந்த வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த பெண்ணின் பெற்றோர் அவர்களை தேடி கண்டுபிடித்தனர். பின்னர் பெண்ணை தங்களுடன் அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி தீபக் வேலைக்காக புனே சென்றிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. தீபக்கை அவரது காதலியின் தந்தை மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இது பற்றி தீபக்கின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

கொலை

இந்த புகாரின் படி போலீசார் தீபக்கை கடத்தி சென்ற பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் என 4 பேரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தீபக்கை கடத்தி தாக்கி கொலை செய்து, உடலை கோதாவரி ஆற்றில் வீசி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கடந்த 1-ந் தேதி 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தீபக்கின் உடலை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story