வீட்டில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி- போலீசார் விசாரணை


வீட்டில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி- போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Sept 2023 12:30 AM IST (Updated: 15 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அகமதுநகரில் வீட்டில் காதல் ஜோடி பிணமாக கிடந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தானே,

அகமதுநகரில் வீட்டில் காதல் ஜோடி பிணமாக கிடந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதல் ஜோடி

அகமதுநகர் பகுதியை சேர்ந்தவர் சோம்நாத் (வயது23). கட்டுமான தொழிலாளியான இவர், தானே மாவட்டம் கசரா தானாஜி நகர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுஜாதா (21) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் காதல் ஜோடி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசிக்க தொடங்கினர். இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக காதல் ஜோடி மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் நேற்று முன்தினம் காலை சோம்நாத்தை சந்திக்க வந்தார்.

2 பேரின் உடல்கள் மீட்பு

அப்போது அவர் கதவை வெகுநேரமாக தட்டிய போதும் யாரும் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு சோம்நாத் மற்றும் சுஜாதா ஆகிய 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அவர்களின் வீட்டில் நடத்திய சோதனையில் கடிதம் எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காதலர்கள் பெற்றோரின் எதிர்ப்பால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்களா? அல்லது கொலையா? என கண்டறிய பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story