மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்; 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் - மனோஜ் ஜராங்கே அறிவிப்பு


மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்; 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டம் - மனோஜ் ஜராங்கே அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2023 7:30 PM GMT (Updated: 21 Oct 2023 7:31 PM GMT)

மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் வருகிற 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.

சோலாப்பூர்,

மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் வருகிற 25-ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மனோஜ் ஜராங்கே அறிவித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டம்

மராத்தா சமூக தலைவர்களின் ஒருவரான மனோஜ் ஜராங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜல்னாவில் உள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி போலீசார் இங்கு நடத்திய தடியடி சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கை தீவிரமடைந்தது. இதைதொடர்ந்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மனோஜ் ஜராங்கேயை நேரில் சென்று சந்தித்து மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் சாதகமான நிலைப்பாடு எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து கடந்த மாதம் 14-ந் தேதி ஜாரங்கே தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். இருப்பினும் இம்மாதம் 24-ந் தேதிக்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று சோலாப்பூரில் உள்ள அக்லுஜில் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் ஜராங்கே கூறியதாவது:-

இறுதி எச்சரிக்கை

மராத்தா சமூகத்தினருக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க எனது இறுதி எச்சரிக்கை 24-ந் தேதி வரை உள்ளது. அரசு என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நாளை ஜல்னாவில் உள்ள அந்தர்வாலி கிராமத்தில் எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த கூட்டத்தை நடத்துவோம். 25-ந் தேதி முதல் புதிதாக மீண்டும் போராட்டம் நடத்தப்படும். மராத்தா சமூகத்தினரின் அமைதியான போராட்டத்தை அரசால் தாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story