சரத்பவாரை சந்தித்ததால் 'இந்தியா' கூட்டணியில் சேருகிறோம் என்று அர்த்தமில்லை - பிரகாஷ் அம்பேத்கர் பேட்டி


சரத்பவாரை சந்தித்ததால் இந்தியா கூட்டணியில் சேருகிறோம் என்று அர்த்தமில்லை - பிரகாஷ் அம்பேத்கர் பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2023 7:30 PM GMT (Updated: 24 Oct 2023 7:30 PM GMT)

சரத்பவாரை சந்தித்ததால் ‘இந்தியா’ கூட்டணியில் சேருகிறோம் என்று அர்த்தமில்லை என பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.

மும்பை,

சரத்பவாரை சந்தித்ததால் 'இந்தியா' கூட்டணியில் சேருகிறோம் என்று அர்த்தமில்லை என பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.

பிரகாஷ் அம்பேத்கர் கட்சி

சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது கட்சி கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பிரித்ததால் காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் தோற்க காரணமாக அமைந்தது. இதனால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியை 'இந்தியா' கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் முயற்சி செய்யும் என கூறப்படுகிறது. ஆனால் 'இந்தியா' கூட்டணியில் நாங்கள் சேர முயன்றதாகவும், காங்கிரஸ் கட்சி தான் எந்த பதிலும் அளிக்கவில்லை என சமீபத்தில் பிரகாஷ் அம்பேத்கர் கூறியிருந்தார்.

சேருவோம் என கூறமுடியாது

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சரத்பவாருடன், பிரகாஷ் அம்பேத்கரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு சரத்பவாரும், பிரகாஷ் அம்பேத்கரும் சந்தித்து பேசினர். இந்தநிலையில் சரத்பவாரை சந்தித்து பேசியதால், வஞ்சித் பகுஜன் அகாடி 'இந்தியா' கூட்டணியில் சேருகிறோம் என்று அர்த்தமில்லை என பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் சந்தித்த போது 15 பேருக்கு மேல் உடன் இருந்தனர். நிகழ்ச்சிக்கு பிறகு நாங்கள் சரத்பவாரின் அலுவலகத்தில் காபி குடித்தோம். அதற்காக கூட்டணியில் சேருவோம் என்று கூறமுடியாது" என்றார்.


Next Story