மும்பையில் 19-ந் தேதி மெட்ரோ ரெயில் சேவையை மோடி தொடங்கி வைக்கிறார்

மும்பையில் வருகிற 19-ந் தேதி மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மும்பை,
மும்பையில் வருகிற 19-ந் தேதி மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மெட்ரோ ரெயில் திட்டம்
மும்பையில் வெர்சோவா- காட்கோபர் இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேற்கு புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தகிசர் - அந்தேரி (மெட்ரோ-7), தகிசர் - டி.என். நகர் (மெட்ரோ-2ஏ) இடையே மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்ட பணிகள் முடிந்து தகிசர் - ஆரே, தகிசர் - தகானுகர்வாடி இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மெட்ரோ-7, 2ஏ திட்டப்பணிகள் முழுமையாக முடிவடைந்து உள்ளது. நேற்று முன்தினம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பணிகள் முடிந்த மெட்ரோ ரெயில் நிலையத்தை ஆய்வு செய்தனர்.
பிரதமர் தொடங்கி வைக்கிறார்
வருகிற 19-ந் தேதி (வியாழக்கிழமை) பிரதமர் மோடி தகிசர் - அந்தேரி, டி.என்.நகர் - தகிசர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
2015-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி பிரதமர் மோடி மும்பையில் மெட்ரோ திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தற்போது அவர் சேவைகளை தொடங்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ ரெயில் சேவை தவிர பல கோடி ரூபாய் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது. பி.கே.சி.யில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்து கொள்ள உள்ளார். கூட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும், அதை முன்னிட்டு பிரதமர் மோடி திட்டங்களை தொடங்கி வைக்க மும்பை வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.






