மராட்டிய கவர்னருடன் பட்னாவிஸ் திடீர் சந்திப்பு- சட்டசபையில் பலப்பரீட்சைக்கு வலியுறுத்தல்


மராட்டிய கவர்னருடன் பட்னாவிஸ் திடீர் சந்திப்பு- சட்டசபையில் பலப்பரீட்சைக்கு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jun 2022 11:07 PM IST (Updated: 29 Jun 2022 12:03 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய அரசியலில் புதிய திருப்பமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ் நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தினார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டிய அரசியலில் புதிய திருப்பமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ் இன்று இரவு சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தினார்.

ஒரு வாரமாக குழப்பம்

மராட்டியத்தில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு, சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அந்த கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 39 பேர், மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளனர். அவர்களுடன் 10 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கவிழ வாய்ப்பு உள்ளது. கடந்த 20-ந் தேதி இரவில் தொடங்கிய இந்த அரசியல் குழப்பம், ஒருவாரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.

உத்தவ் தாக்கரே உருக்கம்

அரசை காப்பாற்றும் முயற்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இன்று தனது மந்திரி சகாக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நேற்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

இப்போதும் ஒன்றுமில்லை. நீங்கள் திரும்பி வந்து, என்னை நேருக்கு நேராக சந்தித்தால் வழிபிறக்கும். கட்சியின் தலைவராகவும், குடும்ப தலைவனாகவும் உங்கள் மீது இன்னும் எனக்கு அக்கறை உள்ளது. நீங்கள் கடந்த சில நாட்களாக கவுகாத்தியில் சிக்கி உள்ளீர்கள். ஒவ்வொரு நாளும் புதிய செய்தி வருகிறது. உங்களில் பலர் தொடர்பில் இருக்கிறீர்கள். உங்கள் மனதளவில் நீங்கள் இன்னும் சிவசேனாவில் தான் உள்ளீர்கள். உங்களின் குடும்பத்தினரும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜனதா தீவிரம்

இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசரவில்லை. அவர்கள் பிடிவாதமாக கவுகாத்தி ஓட்டலிலேயே முகாமிட்டு உள்ளனர்.

இதற்கு மத்தியில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியமைக்கும் முனைப்பில் பா.ஜனதா நேற்று வெளிப்படையாக களத்தில் இறங்கியது. பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டார். அவர் மாலையில் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா வீட்டுக்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மராட்டியத்தில் நிலவும் அரசியல் குழப்பம் மற்றும் பா.ஜனதா ஆட்சியமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஜே.பி. நட்டாவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களுடன் சட்ட நிபுணர் ஒருவரும் இருந்தார்.

கவர்னருடன் திடீர் சந்திப்பு

இந்த நிலையில் விமானம் மூலம் மும்பை திரும்பிய தேவேந்திர பட்னாவிஸ் இரவு 9.30 மணியளவில் ராஜ்பவன் சென்றார். அவருடன் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உடன் இருந்தார். அப்போது, உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கவர்னரை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியே வந்து நிருபர்களிடம் கூறுகையில், "39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக உள்ளனர். அவர்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். எனவே சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தவ் தாக்கரேக்கு உத்தரவிட கவர்னரை கோரி உள்ளோம். இது தொடர்பாக கடிதமும் கொடுத்துள்ளோம். கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார்" என்றார்.

இதனால் மராட்டிய அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

சட்டசபையில் பலம்

மராட்டிய சட்டசபையில், தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்து தவிக்கும் நிலையில், பா.ஜனதாவுக்கு மட்டும் 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் பா.ஜனதாவுக்கு ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த வார இறுதிக்குள் பா.ஜனதா ஆட்சியமைப்பதற்கான யுக்திகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

------------------

1 More update

Next Story