மும்பையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
மும்பை,
மும்பையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
மும்பையில் கடந்த மாத இறுதியில் இருந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மழை ஓய்வு எடுத்து இருந்தது. இந்தநிலையில் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மாலை 3 முதல் மாலை 6 மணி வரை மழை விடாமல் கொட்டி தீர்த்தது. மழை காரணமாக மும்பை கிழக்கு, மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மும்பையில் பெய்து வரும் தொடர் மழைகாரணமாக நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 17.66 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஏரிகளில் 13.36 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 3 நாட்களுக்கு மழை
இந்தநிலையில் மும்பையில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மும்பையில் இன்று மிக கன மழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர தானே, ராய்காட், பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மழை தவிர மும்பையில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.






