சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நவாப் மாலிக் காட்கோபர் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுக்க அனுமதி- கோர்ட்டு உத்தரவு
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நவாப் மாலிக்கிற்கு காட்கோபர் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மும்பை,
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நவாப் மாலிக்கிற்கு காட்கோபர் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மனு தாக்கல்
மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான நிழலுக தாதா தாவூத் இப்ராகிமின் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி அமலாக்கத்துறை அப்போதைய மாநில மந்திரியாக இருந்த நவாப் மாலிக்கை கைது செய்தது. தற்போது அவர் மும்பை ஆர்தர்ரோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறையில் அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் காட்கோபரில் உள்ள ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுப்பதற்காக அனுமதி கோரி சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
கோர்ட்டு அனுமதி
இந்த மனுவை தொடர்ந்து நவாப் மாலிக்கின் உடல் நிலை குறித்து அறிக்கை சமர்பிக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதன்படி மருத்துவ பரிசோதனை அறிக்கை நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி காட்கோபரில் உள்ள சர்வோதாயா ஆஸ்பத்திரி பரிசோதனை மையத்திற்கு நவாப் மாலிக்கை அழைத்து செல்ல ஆர்தர் ரோடு சிறை சூப்பிரண்டுக்கு நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்கேன் எடுப்பதற்கான செலவுகளை நவாப் மாலிக் ஏற்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.