பயந்தர் ரெயில் நிலையம் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி - 4 பேர் காயம்


பயந்தர் ரெயில் நிலையம் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி - 4 பேர் காயம்
x
தினத்தந்தி 20 July 2023 7:45 PM GMT (Updated: 20 July 2023 7:45 PM GMT)

தானே மாவட்டம் பயந்தர் ரெயில் நிலையம் அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் 4 பேர் காயமடைந்தனர்

தானே,

தானே மாவட்டம் பயந்தர் ரெயில் நிலையம் அருகே 20 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டிடம் ஒன்று இருந்தது. ஆய்வில் இந்த கட்டிடம் இடிந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மிராபயந்தர் மாநகராட்சி அந்த கட்டிடத்தில் வசிப்பவர்களை காலி செய்ய கோரி நோட்டீஸ் அனுப்பியது. இதன்பேரில் அங்கு வசித்துவந்தவர்கள் காலி செய்தனர். எனினும் கட்டிடத்தின் தரை தளத்தில் மட்டும் சில கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் தானே மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று காலை 11.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இடிபாடுகளை அகற்றும் பணியின் போது கட்டிட குவியல்களுக்கு மத்தியில் ஒருவரின் உடல் இறந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் பெயர் துர்கா அவ்தேஷ் ராம்(வயது45) என்பதும், அவர் பயந்தர் ரெயில் நிலையத்தில் ஷூ-பாலீஸ் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.


Next Story