பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது- மராட்டிய அரசு


பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது- மராட்டிய அரசு
x

மத்திய அரசு வரி குறைத்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் மீதான வரியை மராட்டிய அரசும் குறைத்தது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை தொடர்ந்து, மராட்டிய அரசும் மதிப்பு கூட்டுவரியை குறைத்துள்ளது.

வரலாறு காணாத விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்த நடைமுறை, கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் ஒரே வாரத்தில் 5 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கின்ற உற்பத்தி வரியும், மாநில அரசுகள் விதிக்கும் உள்ளூர் வரிகளும் (மதிப்பு கூட்டு வரி) பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

மந்திரி கோரிக்கை

இன்று, மத்திய அரசு அதிரடியாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்தது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 8 ரூபாய் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனிடையே மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து, முதல் மாநிலமாக கேரள அரசு, பெட்ரோல் மீதான வாட் வரியை 2.41 ரூபாயும், டீசல் மீதான வாட் வரியை 1.36 ரூபாயும் குறைத்து உத்தரவிட்டது.

மாநில வரி குறைப்பு

இந்நிலையில் எரிபொருள் மீதான கலால் வரி மத்திய அரசு குறைத்த ஒரு நாள் கழித்து, சிவசேனா தலைமைலான மராட்டிய அரசும் இன்று மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளது. இதன்படி பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.2.08-ம், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.1.44-ம் குறைக்கப்பட்டு உள்ளது. மாநில அரசின் இந்த முடிவால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்படும்.

மேலும் மதிப்பு கூட்டு வரி மூலமாக மாதம் பெட்ரோல் மூலம் கிடைக்கும் ரூ.80 கோடி வருவாயும், டீசல் மீதான வருமானம் ரூ.125 கோடியும் குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-----


Next Story