மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 6-வது இடத்துக்கு சிவசேனா- பா.ஜனதா இடையே கடும் போட்டி- வெல்லப்போவது யார்?


மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 6-வது இடத்துக்கு  சிவசேனா- பா.ஜனதா இடையே கடும் போட்டி- வெல்லப்போவது யார்?
x
தினத்தந்தி 3 Jun 2022 2:03 PM GMT (Updated: 3 Jun 2022 2:09 PM GMT)

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் மராட்டியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள 6-வது இடத்தை கைப்பற்றுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் மராட்டியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள 6-வது இடத்தை கைப்பற்றுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மாநிலங்களை எம்.பி. தேர்தல்

மராட்டியத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கள் 6 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவாரும், காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப் காரி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் படேலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி பியூஸ் கோயல், அனில் போன்டே, முன்னாள் எம்.பி. தனஞ்செய் மகாதிக் போட்டியிடுகின்றனர். ஒரு மாநிலங்களை உறுப்பினர் வெற்றி பெற அவருக்கு 42 வாக்குகள் வேண்டும். இதன்படி சிவசேனா சஞ்சய் ராவத், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் பியூஸ் கோயல், அனில் போன்டே வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

6-வது இடத்துக்கு போட்டி

ஆனால் 6-வது உறுப்பினரை தேர்வு செய்ய ஆளும் கட்சி மற்றும் பா.ஜனதாவிற்கு 42 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை. எனவே 6-வது இடத்தை கைப்பற்ற சிவசேனாவின் சஞ்சய் பவார், பா.ஜனதாவின் தனஞ்செய் மகாதிக் ஆகியோர் மோத உள்ளனர்.

மராட்டிய சட்டசபையில் சிவசேனாவுக்கு 55, தேசியவாத காங்கிரசுக்கு 53, காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதேபோல பா.ஜனதாவின் பலம் 106 ஆக உள்ளது. மேலும் பகுஜன் விகாஸ் அகாடிக்கு 3 எம்.எல்.ஏ.க்களும், சமாஜ்வாடி, எம்.ஐ.எம்., பிரகார் ஜன்சக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா 2 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எம்.என்.எஸ்., உழவர் உழைப்பாளர், சுவாபிமானி, ராஷ்ட்ரிய சமாஜ், ஜனசூரியா, கிராந்தி சேட்காரி ஆகிய கட்சி தலா ஒரு எம்.எல்.ஏ.க்களும், 13 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

சிறிய கட்சிகள், சுயேச்சைகள்

இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சியின் கொறடாவிடம் வாக்கு சீட்டை காண்பித்த பிறகு தான் வாக்களிக்க முடியும். எனவே எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிக்க வாய்ப்பில்லை. எனவே சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தான் 6-வது உறுப்பினரை தேர்வு செய்வதில் தீர்மானிக்கக்கூடியவர்களாக உள்ளனர். எனவே வருகிற 10-ந் தேதி மராட்டியத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மரணம் காரணமாக ஒரு இடம் காலியாகவும், நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயிலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்னாவிஸ் மறுப்பு

முன்னதாக பா.ஜனதா தனது 3-வது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து ஆளுங்கட்சி சார்பில் சிவசேனாவை சேர்ந்த அனில் தேசாய், தேசியவாத காங்கிரஸ் சகன்புஜ்பால், காங்கிரஸ் தலைவர் சுனில் கேதார் ஆகியோர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அந்த கோரிக்கையை ஏற்க தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துவிட்டார். இதனால் போட்டி உறுதியாகி விட்டது. வெல்லப்போவது யார்? என்பது தான் பெரும் எதிர்பார்ப்பதாக உள்ளது.


Next Story