ரூ.11.66 கோடி மோசடி வழக்கில் தலைமறைவான தாசில்தார் போலீசில் சிக்கினார்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.11 கோடியே 66 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
போலி ஆவணங்கள் மூலம் ரூ.11 கோடியே 66 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.11.66 கோடி மோசடி
தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு செம்டம்பர் மாதம் மும்பை-வதோரா நெடுஞ்சாலைக்கான சாலை விரிவாக்கம் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது. இதில் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இழப்பீடு பெற்றவர்களின் பட்டியலை சரிபார்த்த போது போலி ஆவணங்களை செலுத்தி ரூ.11 கோடியே 66 லட்சம் அளவில் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி பிவண்டி சாந்திநகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் நிலத்தை இழந்த விவசாயிகள் என்ற போர்வையில் கும்பல் ஒன்று போலி ஆவணங்களை செலுத்தி பண மோசடி செய்தது தெரியவந்தது.
தாசில்தார் கைது
இந்த மோசடியில் தாசில்தார் வித்தல் கோசாவி என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து பெண் உள்பட 17 பேரை கைது செய்தனர். தாசில்தார் வித்தல் கோசாவி தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் தலைமறைவாக இருந்த தாசில்தார் மும்பை கோரேகாவில் பதுங்கி இருப்பதாக சாந்திநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நேற்று அங்கு சென்று தாசில்தார் வித்தல் கோசாவியை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 23-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.






