லாரியில் கடத்தி வந்த ரூ.94 லட்சம் போதைப்பாக்கு பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது
லாரியில் கடத்தி வந்த ரூ.94 லட்சம் மதிப்புள்ள போதைப்பாக்கை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்தனர்
மும்பை,
பால்கர் மாவட்டம் மும்பை-ஆமாதாபாத் நெடுஞ்சாலை மானோர் பகுதியில் போதைப்பாக்கு(குட்கா) கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை வழிமறித்தனர். இதனை கண்ட டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் போலீசார் லாரியை ஜீப்பில் விரட்டி சென்று மடக்கினர். பின்னர் லாரியில் ஏறி நடத்திய சோதனையில், 168 பார்சல்களில் போதைப்பாக்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.94 லட்சம் ஆகும். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர், கிளினர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவற்றை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.